வருகிற தேர்தல்களை சந்திக்க வலுவான கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
வருகிற தேர்தலை சந்திக்க வலுவான கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
சிவகங்கை,
மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மாணவரணி செயலாளர் குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் பேசியதாவது:– இந்த மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை. வருகிற தேர்தல்கள் அனைத்திலும் அ.தி.மு.க. தான் அமோக வெற்றி பெறும். எம்.ஜி.ஆர். தந்த சின்னமும், கொடியும் நம்மிடம் இருக்கும் போது நம்மை யாரும் அசைக்க முடியாது.
சிறுபான்மை, ஆதிதிராவிட மக்களுக்கு என்றுமே அ.தி.மு.க. தான் ஆதரவாக இருக்கும். ஆனால் இப்போது சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் போல ஸ்டாலின் நடிக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த சமுதாயத்திற்கும் பாதிப்போ, பிரச்சினையோ இல்லை. வருகிற தேர்தல்களை சந்திக்க வலுவான கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஜக்கையன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி துனை செயலாளர் கருணாகரன், மாவட்ட துணை தலைவர் எறும்புகுடி ராஜா, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் கோபி, ஜாக்குலின், கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.