கோட்டாவில் 2 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய கோரி உடல்களை வைத்து உறவினர்கள் போராட்டம்-பரபரப்பு
கோட்டாவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட 2 பேரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரு,
கோட்டாவில் 2 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 2 பேரின் உடல்களை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
2 பேர் படுகொலை
உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா கோட்டா பகுதியை சேர்ந்தவர் பரத் பூஜாரி. ஆட்டோ டிரைவர். அதேப்பகுதியை சேர்ந்தவர் யத்தீஷ் காஞ்சன். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் 2 பேரும் கோட்டா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்மகும்பல் பரத் பூஜாரி மற்றும் யத்தீஷ் காஞ்சனையும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கொலையான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போராட்டம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி நேற்று முன்தினம் கொலை நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த நிலையில் நேற்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், 2 பேரின் உடல்களையும் கோட்டா பகுதியில் சாலையில் வைத்து திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், பரத் பூஜாரி, யத்தீஷ் காஞ்சன் ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
ேபச்சுவார்த்தை
இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு 2 பேரின் உடல்களை எடுத்து கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த போராட்டத்தால் கோட்டா பகுதியில் நேற்று காலை சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.