பள்ளி மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்
பள்ளி மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக் குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரத்தில் சமூகநலத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆயிரத்து 36 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினர்.
அப்போது அமைச்சர் சரோஜா, நிருபர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் இதுவரை 10 லட்சத்து 53 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சம் பேர் பட்டதாரிகள்” என்றார்.
பின்னர் அமைச்சர் ஜெயக் குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சியை அழிக்க முடியாது
மு.க.ஸ்டாலின், தினகரன் ஆகியோர் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆசி எங்களுக்கு உள்ளதால் யார் நினைத்தாலும் இந்த ஆட்சியை அழிக்க முடியாது.
அ.தி.மு.க அரசு ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை பிடிப்போம். 2021-ல் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் ஏற்கனவே பல முறை பேச்சுவார்த்தை நடத்தி அரசின் சிரமங்களை எடுத்து சொல்லப்பட்டு உள்ளது. 100 சதவீத வருவாயில் 71 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என அனைத்தையும் கொடுக்கிறோம். மீதம் உள்ள 29 சதவீதம் மக்கள் நல திட்டங்களுக்கு செலவிட்டு வருகிறோம்.
பணிக்கு திரும்ப வேண்டும்
போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பிடிவாத போக்கை கடைபிடித்து வருகிறார்கள். எனவே வேறு வழி இல்லாமல்தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி, போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும்.
யாரையும் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆசிரியர்களை அச்சுறுத்த நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. நிதி இல்லை என்பதை விளக்கமாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம். போராட்டம் நடத்திவரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பின்னணியில் அரசியல் கட்சிகள் பின் புலமாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், வடசென்னை அ.தி.மு.க. எம்.பி வெங்கடேஷ்பாபு, தெற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா, பகுதி செயலாளர் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.