மணலி புதுநகரில் கன்டெய்னர் லாரிகளின் இடையில் சிக்கி தையல்காரர் பலி லாரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கி பொதுமக்கள் சாலை மறியல்
மணலி புதுநகரில் கண்டெய்னர் லாரிகளில் இடையில் சிக்கி டெய்லர் பலியானதால் பொதுமக்கள் ஆத்திரத்தில் லாரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
மீஞ்சூர் அருகே மணலிபுதுநகர் வடிவுடையம்மன் நகரில் வசிப்பவர் சிட்டிபாபு (வயது 50). டெய்லர். இவர் நேற்றுமுன்தினம் மாலையில் துவாரகா நகரில் உள்ள நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு, இரவில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதான கன்டெய்னர் லாரியை மற்றொரு கன்டெய்னர் மூலம் தள்ளிக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், இரவு நேரம் இருட்டாக இருந்ததால் 2 கண்டெய்னர் லாரிகளுக்கும் இடையில் சென்ற சிட்டிபாபு, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், கன்டெய்னர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி ஆவேசமடைந்து, ஆத்திரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உடைத்தனர்.
சாலை மறியல்
பின்னர் மணலிபுதுநகர் செல்லும் சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மணலிபுதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கண்டெய்னர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் விபத்துக்கு காரணமான திருவண்ணாமலை திருக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் தேவேந்திரன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு டிரைவரான அய்யனார் என்பவரை தேடி வருகின்றனர்.