பல்லாவரம் அருகே மினிபஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலி தந்தை கண் எதிரே பரிதாபம்
பல்லாவரம் அருகே, தந்தை கண் எதிரேயே மினிபஸ் சக்கரத்தில் சிக்கி 13 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த அனகாபுத்தூர் குருசாமி நகரைச் சேர்ந்தவர் அம்ஜத்கான். இவருடைய மகள் ஆலியா(வயது 13). இவர், தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி. பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை தனது தந்தையுடன் மோட்டார்சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பல்லாவரம் அருகே பம்மல் நல்லதம்பி சாலையில் சென்றபோது, அவர்களுக்கு முன்னால் பொழிச்சலூரில் இருந்து குரோம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ்சை முந்திச்செல்ல முயன்றார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது எதிரே மற்றொரு வாகனம் வந்ததால் திடீர் என பிரேக் பிடித்தார். இதில் தந்தை-மகள் இருவரும் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் மினி பஸ்சின் பின்பக்க சக்கரம் மாணவி ஆலியாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவள், தந்தை கண் எதிரேயே பரிதாபமாக இறந்தாள். அம்ஜத்கான் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டிரைவர் கைது
விபத்து நடந்த உடன் மினி பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர், பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ஆலியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மினி பஸ் டிரைவரான திருத்தணியை சேர்ந்த ஆறுமுகம்(50) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.