9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் 1,500-க்கும் மேற்பட்டோர் கைது

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-28 22:15 GMT
திருவள்ளூர், 

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியுடன் தொடக்க பள்ளிகளை இணைத்து தமிழகம் முழுவதும் உள்ள 3,500 பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திடீரென திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரிலும், உழவர் சந்தை, காமராஜர் சிலை அருகே என தனித்தனியாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆயிரத்து 332 பெண்கள், 479 ஆண்கள் என மொத்தம் ஆயிரத்து 811 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இப்போராட்டம் காரணமாக திருவள்ளூரில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்