காதல் திருமணம் செய்த ரெயில்வே ஊழியரின் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் ஜோலார்பேட்டை அருகே சம்பவம்
ஜோலார்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த ரெயில்வே ஊழியரின் மனைவி கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அர்வின் (வயது 32). இவர், பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் ரெயில் நிலையத்தில் புக்கிங் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அஸ்வினி (27). இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு எஸ்வந்த் (5) என்ற மகனும், பிரனித்தா (2) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அஸ்வினிக்கு அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அர்வினுக்கு தெரியவரவே, மனைவி அஸ்வினியை கண்டித்துள்ளார். கடந்த 25-ந் தேதி அர்வின் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தனது மகளை தூக்கிக்கொண்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
வேலை முடிந்து அர்வின் வீட்டிற்கு வந்தார். அப்போது மகன் எஸ்வந்த் மட்டும் தனியாக இருந்தான். அவனிடம் கேட்ட போது, அம்மா, தங்கையை தூக்கிக்கொண்டு வாலிபர் ஒருவருடன் சென்றதாக தெரிவித்தான். பின்னர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் அஸ்வினி கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். விசாரணையில், அஸ்வினி தனது மகளுடன் கள்ளக்காதலன் சுபாசுடன் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல ஏலகிரி மலை அருகேயும் ஒரு பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஏலகிரிமலையில் உள்ள தாயலூரை சேர்ந்தவர் பெருமாள் (35), தொழிலாளி. இவரது மனைவி ராதா (30). இவர்களுக்கு திருமணாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் ஏலகிரிமலை கொட்டையூரை சேர்ந்த தங்கராஜ் என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்ததும் பெருமாள் 2 பேரையும் கண்டித்தார். இந்த நிலையில், கடந்த 21-ந் தேதி ராதா தனது மகளை அழைத்துக்கொண்டு, கள்ளக்காதலன் தங்கராஜ் உடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இதுகுறித்து பெருமாள் ஏலகிரிமலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாமதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.