ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 5-வது நாளாக வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட 1,500 பேர் கைது

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1,500 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-28 23:00 GMT
வேலூர், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 23, 24, 25 ஆகிய தேதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு கடந்த 25-ந் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம், சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 6 பேரை கடந்த 25-ந் தேதி போலீசார் கைது செய்து, மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கிடையாது என்றும், பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மாவட்ட அளவில் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கலெக்டர் ராமன் தெரிவித்திருந்தார். ஆனால் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவிந்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை 10 மணி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கலெக்டர் அலுவலகம் அருகே குவியத்தொடங்கினர். இதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைதம்பி (மதுவிலக்கு) தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லோகநாதன், சுந்தரமூர்த்தி முன்னிலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மறியல் போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் வேலூர் - சென்னை சர்வீஸ் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள், ஊழியர்களை போலீசார் கைது செய்து வேன்கள், பஸ்களில் ஏற்றி சத்துவாச்சாரி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட 800 பெண்கள் உள்பட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. குறைந்த அளவு ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

மேலும் செய்திகள்