சிவக்குமார சுவாமிக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி சமூக சீர்திருத்தவாதி என பேச்சு
சிவக்குமார சுவாமிக்கு பிரதமர் ேமாடி புகழஞ்சலி செலுத்தினார். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்று வர்ணித்தார்.
பெங்களூரு,
சிவக்குமார சுவாமிக்கு பிரதமர் ேமாடி புகழஞ்சலி செலுத்தினார். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்று வர்ணித்தார்.
பாரத ரத்னா விருது
111 வயது சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி கடந்த 21-ந் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் பாரத ரத்னா, பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உட்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவக்குமார சுவாமியின் பெயர் விருது பட்டியலில் இல்லை.
மிகுந்த அதிருப்தி
இதனால் கர்நாடக அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக மத்திய அரசு மீது கர்நாடக மக்கள் மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, மாதந்தோறும் மனதில் உள்ளதை பேசுதல்(மன் கீ பாத்) என்ற பெயரில் வானொலியில் பேசி வருகிறார். நடப்பு ஆண்டின் முதலாவதாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அவர் நேற்று வானொலியில் பேசினார்.
துறவிகளின் மண்
அப்போது அவர் சமீபத்தில் மறைந்த சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமியின் சாதனைகள் பற்றி குறிப்பிட்டு தனது புகழஞ்சலியை செலுத்தி இருக்கிறார். பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியா, துறவிகளின் மண். அவர்கள் தங்களின் கருத்துகள், சேவைகள் மூலம் நல்லெண்ணம், சமத்துவம், சமூகத்தை பலப்படுத்துதல் போன்ற பணிகளை செய்கிறார்கள். மனித மாண்புகளின்படி வாழ்ந்தவர் சிவக்குமார சுவாமி. அந்த மாண்புகளில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
ஓய்வின்றி உழைத்தார்
அவரது 111 ஆண்டு வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சமூக கல்வி, பொருளாதார நிலையை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ஓய்வின்றி உழைத்தார். ஆங்கிலம், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி.
மக்களுக்கு கல்வி, உணவு, ஆன்மிக அறிவு கிடைக்க செய்யும் பணியில் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது வாழ்க்கையில் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்கினார். சித்தகங்கா மடம் மாடுகள் மற்றும் விவசாய சந்தையை தொடர்ந்து நடத்தியது.
இவ்வாறு மோடி பேசினார்.
சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்காதது பற்றி அவர் தனது பேச்சில் எதுவும் குறிப்பிடவில்ைல என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.