பூதலூர் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தொடக்கம் மகசூல் குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் விரக்தி

பூதலூர் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. மகசூல் குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

Update: 2019-01-27 22:30 GMT
திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா மாவட்ட விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஆண்டு (2018) ஜூலை மாதம் 19-ந் தேதி திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து ஜூலை 22-ந் தேதி தண்ணீ்ர் திறக்கப்பட்டது. கர்நாடகத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவு திறந்து விடப்பட்டதால், கடந்த ஆண்டு மேட்டூர் அணை பல முறை நிரம்பியது.

வழக்கமாக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படும். கடந்த ஆண்டு தாமதமாக திறக்கப்பட்டாலும், மேட்டூர் அணை நிரம்பியதால் தண்ணீர் தட்டுப்பாடின்றி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் பூதலூர், ஒன்பத்துவேலி, அகரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 16 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு போக சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அனைத்து பகுதிகளிலும் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி விட்டன. மற்ற பகுதிகளில் விரைவில் அறுவடை தொடங்க உள்ளது.

தற்போது கடும் பனிப்பொழிவு இருப்பதால் வயல்களில் ஈரப்பதம் உள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் அறுவடை எந்திரங்களை வயலுக்குள் இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வயல்கள் காய்ந்த பின்னர் அறுவடையை தொடங்கலாம் என விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

பூதலூர் வேளாண் வட்டார பகுதியில் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் நெல் மகசூல் குறைவாக கிடைப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 20 முதல் 26 மூட்டை வரையே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். சில ஊர்களில் ஏக்கருக்கு 8 மூட்டை முதல் 12 மூட்டை வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-

பூதலூர் பகுதியில் நெற்கதிர் வந்து பால் பிடிக்கும் தருணத்தில் கஜா புயல் தாக்கியது. இது மகசூலில் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஏக்கருக்கு 35 முதல் 50 மூட்டைகள் வரை கிடைத்தால் மட்டுமே ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் அதிகபட்சமாக 26 மூட்டைகள் தான் கிடைக்கின்றன. இது மிகவும் குறைவான மகசூல் ஆகும்.

இன்னும் சில நாட்களில் பூதலூர் பகுதியில் அறுவடை பணிகள் முழு வீச்சில் நடைபெறும். 62 கிலோ கொண்ட ஒரு மூட்டை ஆந்திரா பொன்னி ரக நெல்லை, தனியார் வியாபாரிகள் ரூ.1050-க்கு கொள்முதல் செய்கிறார்கள். மகசூலில் ஏற்பட்டுள்ள இழப்பு எதிர்பார்ப்புக்கு மாறானது. எனவே பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் இழப்பீடு வழங்க வேண்டும்.

வேளாண்மை துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து மாதிரி அறுவடை நடத்தி மகசூல் குறித்து உண்மை தகவலை அரசுக்கு தெரிவித்து உரிய இழப்பீட்டை பெற்றுத்தரவேண்டும். பூதலூரில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கை பயன்படுத்த விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்