ஊத்துக்குளியில் பாலக்காடு-திருச்சி ரெயில் நின்று சென்றது பயணிகள் மகிழ்ச்சி
ஊத்துக்குளியில் பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் ஒரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை சத்யபாமா எம்.பி. கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர்,
பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி வழங்கக்கோரி, திருப்பூர் எம்.பி. சத்யபாமா கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, ரெயில்வே துறை மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் வலியுறுத்தினார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான, ஊத்துக்குளி ரெயில் நிலையத்திற்கு காலை 9.24 வரும் பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை ஊத்துக்குளி ரெயில் நிலையத்திற்கு வந்த பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயிலை திருப்பூர் எம்.பி. சத்யபாமா கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதல்நாளான நேற்று ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் இருந்து 36 பயணிகள் பயணம் செய்தனர்.
இதன் பின்னர் சத்யபாமா எம்.பி. பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் (சரக்கு மற்றும் ஊரக) நின்று செல்ல ஏதுவாக நடைமேடை 2-ஐயும் விரிவுபடுத்த ரெயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும், பகல் நேர இண்டர்சிட்டி ரெயில் ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோரிக்கைகளை சாத்தியமாக்கிய ரெயில்வே மந்திரிக்கு ஊத்துக்குளி மக்களின் சார்பாக நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய திருப்பூர் எம்.பி. சத்யபாமா சென்னிமலை நுழைவு வாயில் மேம்பாலத்தை உயரப்படுத்துமாறும் அல்லது புதிய பாலம் அமைத்தல் தொடர்பாக, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுபாராவ், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.