கோலியனூரில் கிராம சபை கூட்டம்: குழந்தை திருமணம் நடந்தால் தகவல் தெரிவியுங்கள்
குழந்தை திருமணம் நடப்பது தெரியவந்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள் என்று கோலியனூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே கோலியனூர் கிராமத்தில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட கிராம மக்களிடம் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா? குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்று கலெக்டர் சுப்பிரமணியன் கேட்டார். அதற்கு பொதுமக்கள் கூறுகையில், மின்விளக்கு, குடிநீர் வசதி உள்ளது என்றனர். அதனை தொடர்ந்து கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் கடைக்கு செல்லும்போது தவறாமல் துணிப்பைகளை கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் பொங்கல் பொருட்கள் வழங்கும்போதும் துணிப்பைகள் மூலம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் துணிப்பை கிடைத்ததா? என்று பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டார். அதற்கு பொதுமக்கள் பலர் எங்களுக்கு துணிப்பை வரவில்லை என்றும் ரேஷன் கடையில் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். உடனே ரேஷன் கடை ஊழியரை அழைத்து ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் துணிப்பை வழங்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கலெக்டர் சுப்பிரமணியன் பேசுகையில், தமிழக அரசு, சுகாதாரத்துறைமூலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தனிநபர் கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறையை கட்டி பயன்படுத்த வேண் டும். திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழித்தால் தொற்றுநோய்கள் ஏற்படும். எனவே குழந்தைகள் முதல் அனைவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் அதிகளவு குழந்தை திருமணம் நடப்பதாக புகார்கள் வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவுடன்தான் பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும். 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என அனைவரும் உறுதியேற்க வேண்டும். அவ்வாறு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி குற்றமாகும். அதுபோன்ற குழந்தை திருமணம் ஏதேனும் உங்கள் பகுதியில் நடந்தால் அதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அந்த சிறுமிக்கு தேவையான உதவியை செய்ய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மஞ்சுளா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் சுகந்தி, விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார் சையத்மெகமூத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.