கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஐ.வி.டி.பி. நிறுவனம் வழங்கியது
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் வழங்கியது.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் மகளிர் சுயஉதவிக்குழு மேம்பாட்டிலும், கல்விப்பணியிலும் சிறந்த சேவையாற்றி வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளின் நலனுக்காக பல்வேறு கல்விப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. 2016-2017-ம் கல்வியாண்டில் இளங்கலை முதலாமாண்டில் சேர்ந்த மாணவிகளை சிறந்த திறன்மிக்க மாணவிகளாக முன்னேற்ற வேண்டும் என்னும் நோக்கத்தோடு தொடர் ந்து மூன்றாண்டுகளுக்கு அடிப்படை ஆங்கிலப்பயிற்சி மற்றும் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை ஐ.வி.டி.பி. நிறுவனம் வழங்கி வருகிறது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி பேராசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பயிற்சிக்கான புத்தகங்களும் பயிற்சியாளர்களுக்கான முழுச்செலவுகளையும் ஐ.வி.டி.பி. நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு முன்பு கல்லூரி பேராசிரியர்கள் அனைவருக்கும் அது தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் பேராசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவிகளுக்கு சிறந்த முறையில் கற்பிக்க ஏதுவாகிறது. இந்த ஆண்டிற்கான பயிற்சி ஐ.வி.டி.பி. கலையரங்கில் நடைபெற்றது.
பயிற்சியை ஐ.வி.டி.பி. தலைவர் குழந்தை பிரான்சிஸ் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும் போது மாணவிகள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் புத்தகங்களும், பயிற்சிகளும் வழங்கப்படுவதால்், பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் அப்பயிற்சிகளை மாணவிகளுக்கு சிறந்த முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பேராசிரியர்களுக்கான பயிற்சியை திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி சமூகப்பணியியல் துறைத்தலைவர் டேனியல் அம்புரோஸ் வழங்கினார். பயிற்சியின் போது பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு 800 திறன் மேம்பாடு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதுவரை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளின் நலனுக்காக ஐ.வி.டி.பி. நிறுவனம் ரூ.47 லட்சம் மதிப்பில் பல்வேறு கல்வி உதவிகளை வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.