நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் ‘உத்தம பிரஜாகியா’ கட்சி போட்டி நடிகர் உபேந்திரா பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் ‘உத்தம பிரஜாகியா’ கட்சி 28 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று நடிகர் உபேந்திரா கூறினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் ‘உத்தம பிரஜாகியா’ கட்சி 28 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று நடிகர் உபேந்திரா கூறினார்.
உபேந்திரா கட்சி தொடங்கினார்
நடிகர் உபேந்திரா கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கர்நாடக பிரக்யாவந்தா ஜனதா கட்சியை தொடங்கினார். ஆனால் அவரும், அவருடைய கட்சியும் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. பின்னர் அந்த கட்சியை கலைத்த அவர் ‘உத்தம பிரஜாகியா’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் நேற்று அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
28 தொகுதிகளிலும் போட்டி
‘கர்நாடக பிரக்யாவந்தா ஜனதா’ கட்சியை கலைத்து ‘உத்தம பிரஜாகியா’ எனும் கட்சியை தொடங்கி இருக்கிறேன். கட்சியின் சின்னமாக ஆட்டோ சின்னம் உள்ளது. ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கட்சியை தொடங்கி உள்ளேன்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் ‘உத்தம பிரஜாகியா’ கட்சி போட்டியிடும். வேட்பாளர்கள் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுவார்கள். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் அறிக்கை
தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களில் நானும் ஒருவன். ஆனால் வேட்பாளர் தேர்வில் நான் தேர்ச்சி அடைய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சினைகள், அந்த தொகுதியில் வசித்து வரும் மக்களுக்கு தான் தெரியும். இதனால் ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்ப மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடப்படும்.
பெங்களூரு மத்திய நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜின் தேர்தல் அறிக்கை தொகுதி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருந்தால் அவருக்கு ஆதரவு அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.