அமைச்சர் செங்கோட்டையன் 29-ந் தேதி நெல்லை வருகை தச்சை கணேசராஜா பேட்டி
அமைச்சர் செங்கோட்டையன் வருகிற 29-ந் தேதி நெல்லை வருகிறார் என தச்சை கணேசராஜா தெரிவித்தார்.
நெல்லை,
அமைச்சர் செங்கோட்டையன் வருகிற 29-ந் தேதி நெல்லை வருகிறார் என தச்சை கணேசராஜா தெரிவித்தார்.
பேட்டி
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 20-ந் தேதி நெல்லையில் நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த விழாவில் திரளாக கலந்துகொண்ட தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள 78-வது ஆண்டு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கிறார். இதற்காக அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 7.40 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறார்.
உற்சாக வரவேற்பு
அங்கிருந்து புறப்பட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வருகிறார். அப்போது அவருக்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 9.30 மணிக்கு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் அவர் கலந்துகொள்கிறார். அங்கு கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைக்கிறார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற 7 வட்ட செயலாளர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகின்றனர். இதேபோல் மற்ற நிர்வாகிகளும் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நெல்லை மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு மற்றும் பலர் உடனிருந்தனர்.