கோபி அருகே ஆடு திருடியவர்களை தடுத்த முதியவர் குத்திக்கொலை 3 பேர் சிக்கினர்

ஆடு திருடியவர்களை தடுத்த முதியவரை குத்திக்கொலை செய்த 3 பேரும் கோபி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Update: 2019-01-26 22:00 GMT
கடத்தூர்,

கோபி அருகே ஆடு திருடியவர்களை தடுத்த முதியவரை குத்திக்கொலை செய்த 3 பேர் சிக்கினர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி என்கிற பரமசிவன் (வயது 65). இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் இவர் கணபதிபாளையத்தை அடுத்த கிழமரத்து கருப்பராயன் கோவில் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் தன்னுடைய ஆடுகளை நேற்று மாலை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென்று 3 ஆடுகளை திருடி அங்கிருந்து தப்ப முயன்றனர். இதை பார்த்த கண்ணுசாமி ஓடிச்சென்று அந்த 3 பேரையும் தடுக்க முயன்றார்.

இதனால் ஆடு திருடியவர்கள் ஆத்திரம் அடைந்து கம்பியால் கண்ணுசாமியின் கழுத்தில் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேரையும் துரத்தி பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோபி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

ஆடு திருடியவர்களை தடுத்த முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்