அரியலூரில் குடியரசு தின விழா: கலெக்டர் விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றினார்

அரியலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2019-01-26 22:45 GMT
அரியலூர்,

அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் 70-வது குடியரசு தினவிழா கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதான புறாவினை பறக்கவிட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று கொண்டார். அதனை தொடர்ந்து கலெக்டர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

மேலும் வீரதீர செயல் புரிந்த 22 போலீசாருக்கு முதல்- அமைச்சர் பதக்கங்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 88 பேருக்கு விருதுகளையும் கலெக்டர் வழங்கினார். விழாவில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் மொத்தம் 137 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 32 ஆயிரத்து 905 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து தேசப்பற்று தொடர்பாக கோவிந்தபுரம், தென்னூர் அன்னை லூர்து, க.அம்பாவூர் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பார்வையாளர்களை கவர்ந்த கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் விளையாட்டுத் திடல் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். குடியரசு தின விழாவில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை சுந்தர்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, கோட்டாட்சியர்கள் (அரியலூர்) சத்தியநாராயணன், ஜோதி (உடையார்பாளையம்), முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் குடியரசு தினத்தையொட்டி நேற்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரியலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம், நகராட்சி அலுவலகம், ரெயில்வே போலீஸ் நிலையம், கிளை நீதிமன்றத்திலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஜெயங்கொண்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

மேலும் செய்திகள்