எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் அமைச்சர் காமராஜ் பேச்சு

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2019-01-26 23:00 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் ஆதி.ஜனகர், நகர செயலாளர் ஷாஜஹான், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் தகுதி அ.தி.மு.க.விற்கு தான் உண்டு. மொழிக்காக உயிர்நீத்த வரலாறு தமிழகத்திற்குத்தான் உண்டு. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்கிறார்.

உலக தமிழ் மாநாட்டினையும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினையும் நடத்தியது அ.தி.மு.க. அரசு தான். மு.க.ஸ்டாலின் மந்திரத்தில் மாங்காய் பறிக்க பார்க்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. வை காக்க உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். மு.க. ஸ்டாலின் பலவீனமாகிவிட்டார்.

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டம் என்று நடத்துகிறார். அதுவும் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்தால் 250 பேர் கூட அந்த கூட்டத்தில் இல்லை. அ.தி.மு.க.விற்கு மக்கள் ஆதரவு உள்ளது. வரும் தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வைத்தான் ஆதரிப்பார்கள். கஜா புயலின்போது தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப் பட்டன. டி.டி.வி.தினகரன் ஏதேதோ பேசுகிறார். குக்கர் மக்கர் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திரைப்பட இயக்குனர் ஜெயபிரகாஷ், தலைமை பேச்சாளர்கள் மாறன், சுவாமிநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் குமாரசாமி,பொதுக்குழு உறுப்பினர் தவமணிஇளங்கோவன், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் ஜெய.இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் செய்திகள்