திட்டத்தை நிறைவேற்ற ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும் மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2019-01-26 22:30 GMT
பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

மேகதாது அணை

அதாவது ரூ.5,912 கோடி செலவில் இந்த அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத் துறை ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பிவைத்துள்ளது.

இந்த நிலையில் மேகதாது அணை திட்டம் குறித்து ராமநகரில் நேற்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும்

ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாதுவில் புதிய அணைகட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. மேகதாதுவில் அணைகட்டுவது மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு தான். மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை நிறைவேற்ற இதற்கு முன்பு மதிப்பிடப்பட்ட செலவு தற்போது அதிகரித்துள்ளது.

அந்த திட்டத்தை நிறைவேற்ற ஏறக்குறைய ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆவதால், செலவும் அதிகரித்து கொண்டு செல்கிறது. மேகதாதுவில் அணைகட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.

பாரத ரத்னா விருது

சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே கர்நாடக மக்களின் கோரிக்கையாகும். சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சிபாரிசு செய்யவில்லை என்று கூறுவது தவறானது. இதற்கு முன்பு சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு சிபாரிசு செய்திருந்தது. நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து விவாதிக்கப்படும். மேலும் மத்திய அரசுக்கும் சிபாரிசு செய்யப்படும். மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனந்த்சிங்கை, கணேஷ் எம்.எல்.ஏ. தாக்கியது குறித்து கட்சி தலைமை விசாரித்து வருகிறது. காயம் அடைந்த ஆனந்த்சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நான் யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ளவில்லை. தவறு செய்தவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

முன்னதாக குடியரசு தினத்தையொட்டி ராமநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மந்திரி டி.கே.சிவக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்