பசுமை மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையில் நெய்வேலியில் ரூ.92 லட்சம் செலவில் புனல் மின் நிலையம் அமைப்பு என்.எல்.சி. தலைவர் ராக்கேஷ்குமார் தகவல்
பசுமை மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையில் நெய்வேலியில் ரூ.92 லட்சம் செலவில் புனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக என்.எல்.சி. தலைவர் ராக்கேஷ்குமார் கூறியுள்ளார்.
நெய்வேலி,
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு என்.எல்.சி. தலைவர் ராக்கேஷ்குமார் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் என்.எல்.சி. பாதுகாப்பு படை, தீயணைப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, சாரண, சாரணியர்கள், கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து என்.எல்.சி. தலைவர் ராக்கேஷ்குமார் பேசியதாவது:-
நாம் குடியரசு தின விழாவை கொண்டாட, ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி, நமக்கு வாய்ப்பு ஏற்படுத்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நமது மரியாதையை இந்த நாளில் செலுத்தவேண்டும்.
நிலக்கரி சுரங்கங்கள், நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையங்கள், சூரியஒளி மின்சக்தி, காற்றாலை மின்சக்தி என பல்வேறு துறைகளில் என்.எல்.சி. தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதோடு, நெய்வேலியில் மட்டும் இருந்துவந்த தனது செயல்பாடுகளை, நாட்டின் பல பகுதிகளிலும் விரிவுபடுத்தி மின்உற்பத்தித்துறையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் நமது நாட்டின் மதிப்பும் உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கதாம்பூர் பகுதியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அமைத்துவரும் 1980 மெகாவாட் மின்நிலையத்தின் கட்டுமானப்பணிகளில், ஒரே நாளில் 1018 மெட்ரிக் டன் எடையிலான இரும்புத்தூண்களும், உத்திரங்களும் பொருத்தப்பட்டது. மேலும் மற்றொரு நாளில் 93 ஆயிரத்து 160 கனஅடி கான்கிரீட் போடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. அந்தமான் தீவில் நடைபெற்றுவரும் 20 மெகாவாட் சூரியஒளி மின்திட்டப் பணிகளில், 2½ மாதத்தில் 2.50 மெகாவாட் சூரியஒளி மின்நிலையத்தை அமைத்து உற்பத்தியை தொடங்கியுள்ளது.
மேலும் நெய்வேலி 2-ம் அனல்மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களுக்காக நீரினை எடுத்துச் செல்லும் பாதையில் ஆண்டிற்கு 1 லட்சத்து 10 ஆயிரம் யூனிட் பசுமை மின்சக்தியை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட 4 x 5 கிலோவாட் சிறிய புனல் மின் நிலையத்தை ரூ.92 லட்சம் செலவில் அமைத்து புதிய சாதனையை படைத்துள் ளது. இது உலகில் முதல்முறையாக அமைக்கப்பட்டதாகும்.
இந்த வாரம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 ஆண்டு காலத்தில் ரூ.23 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் சூரியஒளி மின்நிலையங்கள் அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து என்.எல்.சி.யில் அதிக நாட்கள் பணிபுரிந்துள்ள தொழிலாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மேலும் என்.எல்.சி.யில் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் என்.எல்.சி. தலைவர் ராக்கேஷ்குமாரின் மனைவி கஞ்சன், இயக்குனர்கள் தங்கபாண்டியன், விக்ரமன், நாதள்ள நாக மகேஷ்வர் ராவ் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நெய்வேலி மகளிர் மன்ற உறுப்பினர்கள், என்.எல்.சி. மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளை சந்தித்து, அவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்தினர்.