திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார் ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து, ரூ.1½ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை,
இந்தியாவின் 70–வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி ஆகியோர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பின்னர் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 46 பேருக்கு முதல் – அமைச்சரின் பதக்கத்தை அணிவித்து கலெக்டர் பாராட்டினார்.
இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் விழா பந்தலில் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு கலெக்டர் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலாசாரம், பண்பாடு, மனிதநேயம் வளர்ப்போம், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை விளக்கி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் போன்ற கலைகள் இணைந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தன. கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் சிறப்பு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி முகமை திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை என பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 259 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்து 15 ஆயிரத்து 428 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை, வனத்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் விவசாய பொறியியல் துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, பயிற்சி கலெக்டர் பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களையும், பார்வையாளர்களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.