தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்றும் விண்ணப்பிக்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-26 22:45 GMT

வேலூர், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22–ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. தேர்வு நடக்க இருக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்பதால் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அன்படி தற்காலிக ஆசிரியர் பணியிடத்தில்சேர பலர் விண்ணப்பம் கொடுத்து வருகிறார்கள். வேலூர் மாவட்டத்திலும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பம் கொடுத்து வருகிறார்கள். இவர்களை தேர்வு செய்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகளை செயல்படவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது, பள்ளிகள் வழக்கம்போல செயல்பட நடவடிக்கை எடுப்பது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறியதாவது:–

வேலைநிறுத்தம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 25 சதவீத ஆசிரியர்களும், தொடக்க, நடுநிலைப்பளிகளில் 80 சதவீத ஆசிரியர்களும் பணிக்கு வரவில்லை. அவர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழகம் இல்லாததால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, அதனுடன் கல்வி சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

நாளை (இன்று) வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பரிசீலனைசெய்து பணிநியமனம் செய்யப்படுவார்கள். அவர்கள் 28–ந் தேதி (நாளை) முதல் பணியில் சேர்க்கப்பட்டு பள்ளிகள் வழக்கம்போல செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் செல்போன் எண்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. விவரம் தேவைப்படுபவர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களை தொடர்புகொள்ளலாம் என்றார்.

மேலும் செய்திகள்