ஓய்வூதியம் கேட்டு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 805 பேர் கைது

ஓய்வூதியம் கேட்டு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 805 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-25 23:46 GMT
ஈரோடு,

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றி வருபவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டு இயக்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறது.

4-வது நாளாக நேற்று மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் நேற்று ஆசிரிய-ஆசிரியைகள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே சம்பத் நகர் கொங்கு கலையரங்கம் முன்பு கூடினார்கள். அங்கு மறியல் போராட்டம் தொடங்கியது. மாவட்ட பொறுப்பாளர் வெங்கிடு தலைமை தாங்கினார். விஜயேந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கர்பாபு, சரவணன், சுகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் வி.எஸ்.முத்துராசாமி, சிவசங்கர், மணிபாரதி, உஷா, செந்தில்குமார் உள்பட பலர் பேசினார்கள்.

போராட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அங்கு ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சார்லஸ் (பவானி), ரமேஷ் (மதுவிலக்கு), எட்டியப்பன் (போக்குவரத்து) மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், சிவக்குமார், அமுதா மற்றும் போலீசார் போராட்டக்குழுவினரை தடுத்து சாலை மறியல் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். உடனடியாக போராட்டக்குழுவினர் அங்கேயே நடுரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சம்பத் நகர் ரோடு முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரையும் போலீசார் கைது செய்து வேன்களிலும், பஸ்களிலும் ஏற்றினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களான பெண்கள் 1,830 பேரும், ஆண்கள் 975 பேரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 2 ஆயிரத்து 805 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆண்கள் வீரப்பன்சத்திரம் ஜனனி திருமண மண்டபத்திலும், பெண்கள் வ.உ.சி.பூங்கா அருகே உள்ள மல்லிகை அரங்கிலும் அடைத்து வைக்கப்பட்டனர்.

நேற்று ஈரோட்டில் நடந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வணிகவரித்துறை, காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள், சமூகநலத்துறை, கருவூலத்துறைகளை சேர்ந்த 22 சங்கத்தினரும், பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறையை சேர்ந்த 24 சங்கத்தினரும் என 46 சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டபோது பலரும் கைது ஆகாமலேயே அங்கிருந்து வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கைது எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக இருந்தது.

திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இரவு 7.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்