கடந்த 7 மாதத்தில் 48 டன் பிளாஸ்டிக் பறிமுதல்; ரூ.2¼ கோடி அபராதம் மும்பை மாநகராட்சி தகவல்
மும்பையில் கடந்த 7 மாதத்தில் 48 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.2¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் கடந்த 7 மாதத்தில் 48 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.2¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை
மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. முதலில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்திருந்தது.
இந்தநிலையில் தற்போது மீண்டும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சர்வ சாதாரணமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
ரூ.2¼ கோடி அபராதம்
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், கடந்த 7 மாதங்களில் மும்பையில் 48 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடியே 20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க இனிமேல் பிளாஸ்டிக் பொருட்களுடன் சிக்கும் கடைக்காரர்களின் உரிமத்தை ரத்து செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.