மும்பை சிவாஜி பார்க்கில் இன்று குடியரசு தினவிழா கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசியகொடி ஏற்றுகிறார் மொரீசியஸ் பிரதமர் பங்கேற்பு

தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் இன்று நடைபெறும் குடியரசு தினவிழாவில், கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசியகொடி ஏற்றுகிறார். சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் பிரதமர் பங்கேற்கிறார்.

Update: 2019-01-25 23:30 GMT
மும்பை, 

தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் இன்று நடைபெறும் குடியரசு தினவிழாவில், கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசியகொடி ஏற்றுகிறார். சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் பிரதமர் பங்கேற்கிறார்.

குடியரசு தினவிழா

நாடு முழுவதும் இன்று(சனிக்கிழமை) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மராட்டிய மாநில அரசு சார்பில் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடக்கிறது.

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த கொண்டாட்டத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் அவர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் பங்கேற்கிறார்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

கலைநிகழ்ச்சி

இந்த விழாவின்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடக்கின் றன.

இதற்காக கடந்த சில நாட்களாக போலீசார் அணிவகுப்பு மற்றும் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வந்தனர்.

பயங்கரவாதிகளின் கழுகு பார்வையில் இருக்கும் மும்பை பெருநகரத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

குடியரசு தின கொண்டாட்டம் நடைபெறும் சிவாஜி பார்க் மைதானம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்