பெங்களூரு விதானசவுதாவில் நடந்தது பட்ஜெட் குறித்து விவசாய பிரதிநிதிகளுடன் குமாரசாமி ஆலோசனை
பெங்களூரு விதானசவுதாவில் பட்ஜெட் குறித்து விவசாய பிரதிநிதிகளுடன் குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
பெங்களூரு விதானசவுதாவில் பட்ஜெட் குறித்து விவசாய பிரதிநிதிகளுடன் குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்காததால், விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரசாமி ஆலோசனை
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம்(பிப்ரவரி) 6-ந் தேதி பெங்களூரு விதானசவுதாவில் தொடங்குகிறது. 8-ந் தேதி நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி ஒவ்வொரு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நிபுணர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு கொண்டு வர வேண்டிய திட்டங்கள் குறித்து பெங்களூரு விதானசவுதாவில் நேற்று விவசாய பிரதிநிதிகள், விவசாய சங்கத்தினருடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். குறிப்பாக விவசாய கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளுடன் குமாரசாமி விரிவாக ஆலோசித்தார்.
கடன் தள்ளுபடி
மேலும் கடன் தள்ளுபடி விவகாரத்தில் கூட்டணி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்து கூறினார். இதுதவிர விவசாயிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது குறித்தும், பட்ஜெட்டில் விவசாயி களுக்காக புதிய திட்டங்களை சேர்ப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மாநிலத்தில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவது, பயிர்களுக்கு விலை நிர்ணயிப்பது குறித்து விவசாய சங்கத்தினர் மற்றும் பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
போலீசாருடன் வாக்குவாதம்
முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் விதானசவுதாவுக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் அந்த விவசாயிகள் அனைவரையும் போலீசார் கூட்டத்தில் பங்கேற்க உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் விதானசவுதா முன்பு போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு, குறிப்பிட்ட விவசாயிகள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள போலீசார் அனுமதித்தனர். மற்றவர்கள் விதானசவுதாவில் இருந்து புறப்பட்டு சென்றனர்.