சுரங்கப்பாதை, மொட்டை மாடியில் பதுக்கல் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் 2 கடைகளில் சுரங்கப்பாதை மற்றும் மொட்டை மாடியில் பதுக்கி வைத்திருந்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-01-25 22:45 GMT
திண்டுக்கல், 

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர்களை கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தனிப்படை அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உள்ள கடைகளில் நேற்று சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்குள் நுழைந்து அதிரடியாக சோதனையிட்டனர். ஆனால், அந்த கடையில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களில் எதுவும் இல்லை. எனினும், சந்தேகம் தீராத அதிகாரிகள் கடையின் அனைத்து பகுதியிலும் சோதனை செய்தனர். அப்போது கடையில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் அந்த சுரங்கப்பாதைக்குள், பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் உள்பட அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து சுரங்கப்பாதைக்குள் இருந்த 700 கிலோ பிளாஸ்டிக் பொருட் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதேபோல் மற்றொரு கடையிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த கடையிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் இல்லை. இதனால் கடையின் மொட்டை மாடியை அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கு 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடை உரிமையாளருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்