மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2019-01-25 22:15 GMT
நாமக்கல், 

நாமக்கல்லில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சப்-கலெக்டர் கிராந்தி குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய ஊர்வலம், மோகனூர் ரோடு, மணிக்கூண்டு, துறையூர் ரோடு வழியாக நடந்து நகராட்சி மண்டபம் சென்றடைந்து முடிவுற்றது.

இதில் தனியார் செவிலியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். அப்போது வாக்காளராக பதிவு செய்வது, தேர்தலில் வாக்களிப்பது உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு நடத்து சென்றனர்.

அதையடுத்து நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. பின்னர் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

ராசிபுரத்தில் தேசிய வாக்காளர் தின ஊர்வலம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். தாசில்தார் அலுவலகம் அருகில் புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட வழங்கல் அலுவலர் பர்ஹத்பேகம் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் புதிய பஸ்நிலையம் வரை சென்றது. இதில் தாசில்தார் சாகுல் அமீது, தேர்தல் துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், ராசிபுரம் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருச்செங்கோட்டில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள், செஞ்சிலுவை சங்க மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சுகுமார் கொடியசைத்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் தாசில்தார் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு தாசில்தார் சுப்பிரமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்

குமாரபாளையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குமாரபாளையம் ராஜம் தியேட்டரில் தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் மெயின்ரோடு வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்