கோவை அருகே அட்டகாசம் செய்த காட்டு யானை சின்னதம்பி பிடிபட்டது
கோவை அருகே அட்டகாசம் செய்த காட்டு யானை சின்னதம்பி பிடிபட்டது.
கோவை,
கோவையை அடுத்த கணுவாய், தடாகம், பன்னிமடை, வரப்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 2 காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன. அந்த கிராமங்களையே அவை சுற்றி சுற்றி வந்ததால் அங்குள்ள பொதுமக்கள் அந்த காட்டு யானைகளுக்கு விநாயகன், சின்னதம்பி என்று பெயரிட்டனர்.
2 காட்டு யானைகளை பிடித்து வேறு இடத்தில் விட வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கடந்த மாதம் 18-ந் தேதி விநாயகன் என்ற காட்டு யானை அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில் அருகே பிடிபட்டது. பின்னர் விநாயகன் காட்டு யானை முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது.
தொடர்ந்து அட்டகாசம் செய்த சின்னதம்பி யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் சின்னதம்பி யானை ஏற்கனவே விநாயகன் யானையை பிடித்த இடத்தின் அருகே சென்றது. இதுதான் அதை பிடிக்க சரியான இடம் என்று எண்ணிய வனத் துறையினர் அங்கு வைத்து அதை பிடிக்க முடிவு செய்தனர்.
பின்னர் சின்னதம்பி யானைக்கு துப்பாக்கி மூலம் காலை 6.30 மணிக்கு மயக்க ஊசி செலுத்தப் பட்டது. இதனால் அந்த யானை எங்கும் செல்லாமல் அங்கேயே நின்றது. அதனுடன் ஒரு பெண் யானை மற்றும் குட்டி இருந்தன. அந்த யானைகள் வனத்துறையினரை அருகில் விடவில்லை. வனத்துறையினர் 1½ மணி நேரம் போராடியும் அந்த யானை, மற்றும் குட்டியை அங்கிருந்து துரத்த முடியவில்லை.
இதையடுத்து கும்கிகள் மூலம் அந்த யானைகள் அங்கிருந்து துரத்தப்பட்டன. பின்னர் சின்னதம்பி யானையை லாரியில் ஏற்றும் பணி தொடர்ந்தது. லாரியில் யானையை ஏற்றும்போது அது வேறு பகுதிக்கு செல்வதை தடுக்க லாரியின் இருபுறமும் பொக்லைன் எந்திரங்கள் நிறுத்தப்பட்டன.
பின்னர் கும்கி யானைகள் விஜய், பொம்மன் ஆகியவற்றின் உதவியுடன் சின்னதம்பி யானையை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் லாரியில் ஏற அடம் பிடித்தது. எனினும் கும்கி யானை, சின்னதம்பி யானையை விடாமல் குத்தி தள்ளியது. இதனால் அந்த காட்டு யானை லாரிக்குள் ஏறியது. பிறகு அந்த யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடுவதற்காக டாப்சிலிப் கொண்டு சென்றனர்.