தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வலியுறுத்தி, அந்த ஆலையில் பணியாற்றிய பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வலியுறுத்தி, அந்த ஆலையில் பணியாற்றிய பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா.
தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தையடுத்து அந்த ஆலை தமிழக அரசால் மூடப்பட்டது. இதனால் அந்த ஆலையின் மூலம் தொழில் செய்து வந்த நிறுவனங்கள், அந்த ஆலையில் பணியாற்றிய பணியாளர்கள் என பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என்று கூறி, ஆலை முன்பு, ஆலையில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பலர் நேற்று திரண்டனர். அப்போது அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது அவர்கள் ஆலையை திறக்க வேண்டும். இல்லை என்றால் வருகிற திங்கட்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
வேலைநிறுத்தம்
இந்த நிலையில் நேற்று மாலையில், பசுமை தீர்ப்பாயத்தின் ஆணை மற்றும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி ஆலையை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக செயல்பாடுகளை சார்ந்திருக்கின்ற நிறுவனங்களும் பணியாளர்களும் நேற்று மாலையில் துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.