தர்மபுரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் தொடங்கிய தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சிவன்அருள், அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஹேமா, தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், செல்வக்குமார், தேர்தல் தாசில்தார் சேதுலிங்கம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரியில் இருந்து பஸ் நிலையம், நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக அரசு மருத்துவமனை வரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், தேர்தல் அலுவலர் அருண் நேரு ஆகியோர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், நிர்வாக பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அய்யப்பன் நன்றி கூனார்.
காரிமங்கலத்தில் நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு துணை தாசில்தார் பாலமுருகன் தலைமை தாங்கினார். அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போலீஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் மாணவிகள் வாக்காளர் தினம் குறித்த பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லாவண்யா, சித்ரா, சின்னமாதன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.