அனுமதியின்றி படகு மூலம் வந்த இலங்கை மீன்வியாபாரி தூத்துக்குடியில் கைது போலீசார் தீவிர விசாரணை
இலங்கையில் இருந்து அனுமதியின்றி படகில் வந்த மீன்வியாபாரியை தூத்துக்குடியில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
இலங்கையில் இருந்து அனுமதியின்றி படகில் வந்த மீன்வியாபாரியை தூத்துக்குடியில் போலீசார் கைது செய்தனர்.
மீன்வியாபாரி
இலங்கை மன்னார் மாவட்டம் நானா நாட்டான், மோட்டாக்கடை பகுதியை சேர்ந்தவர் சின்னகருப்பையா. இவருடைய மகன் தாமரைக்கண்ணன் (வயது 42), மீன் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி தாளமுத்துநகர் ராம்தாஸ்நகரில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்தார். இதை அறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அவரிடம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, கியூ பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வந்தது எப்படி?
அதன் விவரம் வருமாறு:-
தாமரைக்கண்ணனின் உறவினர் மூர்த்தி(56) தாளமுத்துநகர் ராம்தாஸ்நகர் அகதிகள் முகாமில் உள்ளார். இவருடைய தந்தை முனியாண்டி கடந்த மாதம் 26-ந் தேதி இறந்து விட்டார். அவருக்கு கடந்த 24-ந் தேதி காரியம் நடத்தி உள்ளனர். இதில் அவர் கலந்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக கடந்த 17-ந் தேதி அனுமதியின்றி இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு ஒரு விசைப்படகு மூலம் தாமரைக்கண்ணன் மற்றும் 3 பேர் வந்ததாக கூறப்படுகிறது. 18-ந் தேதி அவர் மதுரை சம்பக்குளத்தில் உள்ள தனது தங்கை வசுமதி வீட்டுக்கு வந்து உள்ளார். அதன்பிறகு தங்கையின் கணவர் முரளிதரனுடன், கடந்த 23-ந் தேதி தூத்துக்குடி ராம்தாஸ்நகர் அகதிகள் முகாமுக்கு வந்து உறவினரின் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து உரிய ஆவணம் இன்றி சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த தாமரைக்கண்ணனுடன் வந்தவர்கள் யார்?, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.