தூத்துக்குடி-கோவில்பட்டியில் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் சாலைமறியல் போராட்டம் பெண்கள் உள்பட 1,265 பேர் கைது

தூத்துக்குடி, கோவில்பட்டியில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பெண்கள் உள்பட 1,265 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-25 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி, கோவில்பட்டியில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பெண்கள் உள்பட 1,265 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலைநிறுத்தம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(ஜாக்டோ-ஜியோ) சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.

சாலை மறியல்

நேற்று 3-வது நாளாக தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கம் முன்பு பாளையங்கோட்டை ரோட்டில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஹென்றி தாமஸ், சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 410 பெண்கள் உள்பட 575 பேரை கைது செய்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து நேற்று காலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அண்ணா பஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன் (மேற்கு), ஸ்டெல்லாபாய் (அனைத்து மகளிர்) மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் கணேசன், முத்துசாமி, சின்னதம்பி, செல்வராஜ், சிவன், மூர்த்தி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 580 பெண்கள் உள்பட 690 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையொட்டி அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்