திருச்சி அருகே ஆட்டோ மோதி முதியவர் பலி விபத்து நடந்த இடத்திற்கு சென்ற மற்றொருவர் கார் மோதி சாவு

திருச்சி அருகே ஆட்டோ மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்ற மற்றொரு முதியவர் கார் மோதி இறந்தார்.

Update: 2019-01-25 22:00 GMT
திருச்சி அருகே ஆட்டோ மோதி முதியவர் பலி விபத்து நடந்த இடத்திற்கு சென்ற மற்றொருவர் கார் மோதி சாவு

கொள்ளிடம் டோல்கேட், 

திருச்சி நெ.1 டால்கேட் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக நெ.1 டோல்கேட்டிற்கு செல்வதற்காக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாருதி நகர் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் சமயபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆட்டோ, பரமசிவம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்து மயங்கினார்.

அதேநேரத்தில் நெ.1 டோல்கேட்டில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற கூத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜீ(60), பரமசிவம் மீது ஆட்டோ மோதியபோது ஏற்பட்ட சத்தம் கேட்டு அங்கு செல்ல சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், ராஜீ மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்துகளில் படுகாயமடைந்த பரமசிவம் மற்றும் ராஜீ ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற ஆட்டோ மற்றும் கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்