மயிலாடுதுறை பகுதிகளில் 4-வது நாளாக வேலை நிறுத்தம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் - 500 பேர் கைது

மயிலாடுதுறை பகுதிகளில் 4-வது நாளாக வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-25 23:00 GMT
மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து 3-வது நாளாக மயிலாடுதுறையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வி துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 500 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்