ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு - குமரி மாவட்ட கலெக்டர் வழங்க, ஐகோர்ட்டு உத்தரவு
ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதல்கட்டமாக ரூ.1 லட்சத்தை இழப்பீடாக குமரி மாவட்ட கலெக்டர் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுரை நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த ஏ.வி.சகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
மதுரை,
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் திடீர் மரணம், கற்பழிப்பு, ஆசிட் வீச்சு போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் கடந்த 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, திடீர் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கற்பழிப்பு, ஆசிட் வீச்சு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையும், ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடமும் விண்ணப்பித்து இழப்பீட்டை பெறும் வழக்கம் உள்ளது. ஆனால் உண்மையில் இதுபோன்ற திட்டங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது என்ற தகவல்கள் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் உள்பட பலருக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் கற்பழிப்பு போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் இழப்பீட்டு தொகையை பெற தானாக முன் வருவதில்லை.
எனவே இதுபோன்ற சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்த உடன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர், போலீசார், மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று உரிய இழப்பீட்டை நேரடியாக வழங்கவும், 2013-ம் ஆண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து உரிய இழப்பீட்டை பெறாதவர்களுக்கும் அந்த தொகையை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.அழகுமணி, இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘கடந்த 17-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடுத்தர வயதுடைய பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. கணவனை இழந்த பெண்ணான இவரை, அதே பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் என்பவர் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜான்ரோஸ், அவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண், தற்போது கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டோர் நிவாரண திட்டத்தின்படி ஆசிட் வீச்சு சம்பவத்தில் முகம் சிதைந்து போனால் சம்பந்தப்பட்டவருக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த தொகையையும், அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வருகிற திங்கட்கிழமைக்குள் முதல்கட்டமாக ரூ.1 லட்சத்தை இழப்பீடாக குமரி மாவட்ட கலெக்டர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்டவர்கள் பயன்பெறுவது தொடர்பாக ஆலோசிக்க தமிழக இலவச சட்டப்பணிகள் மையத்தின் உறுப்பினர் செயலாளர் வருகிற 28-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.