திருப்பூரில் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் ரூ.4½ கோடி கையாடல்
திருப்பூரில் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் காணிக்கையாக வந்த ரூ.4½ கோடியை கையாடல் செய்ததாக பொருளாளர் உள்பட 7 பேர் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் குமார் நகர் பங்களா பஸ் நிறுத்தத்தில் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் போதக சேகர குழு உறுப்பினரான திருப்பூர் மங்கலம் ரோடு புளியமர தோட்டத்தை சேர்ந்த பெவின் சாமுவேல் ராஜ்(வயது 34) என்பவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரனிடம் புகார் மனு கொடுத்தார்.
அதில், “சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தின் பொருளாளர் தாய்மணி ஜோசப், செயலாளர் வில்சன் மற்றும் போதக சேகர குழு உறுப்பினர்கள் ஜான்சந்திரராஜ், யோபு, பிரான்சிஸ் மனோகர்தாஸ், ராஜேந்திரன், ஐஸ்வர்யா ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். தாய்மணி ஜோசப் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான வரவு-செலவு கணக்குகளை கமிட்டியில் தாக்கல் செய்து ஒப்புதல் பெறவில்லை. தலைவர் கையெழுத்து இல்லாமல், கமிட்டியின் ஒப்புதல் இல்லாமல் 2017-18-ம் ஆண்டு வரவு-செலவு கணக்கு விவர புத்தகத்தை ஆலயத்தின் உறுப்பினர்களுக்கு வினியோகம் செய்துள்ளனர். மேற்கண்ட 7 பேரும் ஆலயத்தின் கணக்குகளில் முறைகேட்டில் ஈடுபட்டும், தவறான கணக்குகள் மூலமாக ஆலயத்துக்குரிய ரூ.4½ கோடியை கையாடல் செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்“ என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பாக்குட்டி இந்த புகாரை பெற்று விசாரணை நடத்தினார். சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் காணிக்கையாக வந்த ரூ.4½ கோடியை போலியாக ஆவணங்கள் தயாரித்து, கூட்டு சதி செய்து கையாடல் செய்ததாக தாய்மணி ஜோசப், வில்சன், ஜான் சந்திரராஜ், யோபு, பிரான்சிஸ் மனோகர்தாஸ், ராஜேந்திரன், ஐஸ்வர்யா ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.