மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் இருந்து யானை பிருக்ருதி திருநள்ளாறு புறப்பட்டது

மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் இருந்து திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் யானை பிருக்ருதி நேற்று முகாமில் இருந்து புறப்பட்டது.

Update: 2019-01-24 22:45 GMT
மேட்டுப்பாளையம்,


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. இங்கு தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகள் தங்க வைக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம் வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டன.

முகாமில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான யானை பிருக்ருதி பங்கேற்றுள்ளது. முகாமில் கலந்து கொண்ட யானை பிருக்ருதி தினசரி 2 வேளையும் நடைபயிற்சி மேற்கொண்டது. ஷவர் மற்றும் குளியல் மேடையில் ஆனந்த குளியல் போட்டது. யானைக்கு பசுந்தீவனமும் வழங்கப்பட்டது. முகாமில் யானை பிருக்ருதி உற்சாகத்துடன் இருந்தது.

இந்த நிலையில் தர்பாரண்யேஸ்வர சுவாமி, சனீஸ்வர பகவான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அடுத்த மாதம் 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கஜ பூஜை மற்றும் கோ பூஜை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் யானை நேற்று முகாமில் இருந்து புறப்பட்டது. முகாம் நிறைவடைய ஒரு வாரமே உள்ள நிலையில் இந்த யானை புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே யானைகளை ஏற்றுவதற்காக சாய்வுதளம் அமைக்கப்பட்ட பகுதியில் லாரி நிறுத்தப்பட்டது. மாலை 5.45 மணிக்கு திருநள்ளாறு செல்வதற்காக யானை பிருக்ருதி ஏற்றப்பட்ட லாரி முகாமில் இருந்து புறப்பட்டது. எந்தவித தகராறும் செய்யாமல் பிருக்ருதி லாரியில் ஏறிக்கொண்டது.

முகாமில் இருந்து வெளியே வரும்போது யானை பிருக்ருதி மற்ற யானைகளை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் சிந்தியபடி சோகத்துடன் வந்தது. யானையை ஏற்றிய லாரி வனபத்ரகாளியம்மன் கோவில் கொடி மரம்முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் லாரி புறப்பட்டு திருநள்ளாறு புறப்பட்டது. பாகன்கள் முருகேசன், மணிகண்டன் ஆகியோருடன் மற்ற பாகன்களும் யானையை வழியனுப்பி வைத்தனர். இதில் சமய அறநிலையத்துறையினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்