கரூரில் தாறுமாறாக ஓடிய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதல்; தொழிலாளி பலி

கரூரில் தாறுமாறாக ஓடிய கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-24 23:00 GMT
கரூர்,

கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பின்புறத்தில் மேற்குமட வளாக சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. நேற்று மாலை அந்த காரில் ஏறிய ஒருவர், திடீரென பிரேக்கை மிதித்துக்கொண்டு ஆக்சிலேட்டரை வேகமாக இயக்கினார். அப்போது திடீரென அவருடைய கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் மீது அந்த கார் மோதியதில் அவை சேதமடைந்தன.

தொடர்ந்து ஓடிய அந்த கார், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கரூர் அருகே எலவனூரை சேர்ந்த தொழிலாளியான செந்தில்(வயது 35) மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் காரின் அடிப்பகுதியில் சிக்கி, தரதரவென இழுத்து செல்லப்பட்டதில் உருக்குலைந்தது. பின்னர் சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் அந்த கார் பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் செந்தில் படுகாயமடைந்தார். அப்போது காரை விட்டு கீழே இறங்கிய நபர் தப்பி ஓடிவிட்டார்.

செந்திலை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விபத்தை ஏற்படுத்திய காரை இயக்கியது கரூரை சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரியவந்தது. திடீரென கார் கட்டுப்பட்டை இழக்க காரணம் என்ன? குடிபோதையில் அவர் காரை இயக்கினாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் இறந்த செந்திலுக்கு இலக்கியா(28) என்ற மனைவியும், ஆண், பெண் என இரட்டை குழந்தைகளும் உள்ளனர். விபத்தில் கார் மோதியதில் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள கான்கிரீட் பூச்சு உடைந்து அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் மின்விபத்து ஏதும் ஏற்பட்டு விடுமோ? என அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே உடைந்த மின்கம்பத்தை துரிதமாக அகற்ற உரிய நடவடிக்கையை மின்வாரியத்துறையினர் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்