செங்கிப்பட்டியில் நெற்பயிர்களை நாசம் செய்யும் குரங்குகள் அப்புறப்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

செங்கிப்பட்டியில் நெற் பயிர்களை நாசம் செய்யும் குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-01-24 22:45 GMT
பிள்ளையார்பட்டி,

தஞ்சை அருகே பூதலூர் தாலுகாவில் செங்கிப்பட்டி உள்ளது. இப்பகுதி ஏரி பாசனம் மூலமாக விவசாயம் நடைபெறும் பகுதியாகும். செங்கிப்பட்டி பகுதியில் மைலாண்டான் ஏரி, நத்தமான்ஏரி உள்பட பல்வேறு ஏரிகள் உள்ளன.

ஏரிகளில் கிடைக்கும் தண்ணீரை பொறுத்தே செங்கிப்பட்டி பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள். ஏரியில் தண்ணீர் வராவிட்டால் நெல் சாகுபடியை மேற்கொள்வது கடினம். கடந்த சில ஆண்டுகளாக ஏரி மூலமாக விவசாயத்துக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் கவலையாக உள்ளது.

இந்த நிலையில் செங்கிப்பட்டி அருகே சானூரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கரியப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் கிராமங்களில் உள்ள வயல்களில் அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வயல்களுக்குள் கூட்டம் கூட்டமாக இறங்கும் குரங்குகள் நெற்பயிர்களை ஆங்காங்கே சிதற செய்து, கடும் சேதத்தை விளைவித்து விடுகின்றன.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி மிகவும் சிரமத்துடன் சாகுபடி செய்து உள்ளோம். ஒரு பக்கம் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வந்த நெல் சாகுபடி, தற்போது குரங்கு தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனையாக உள்ளது.

குரங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பது மிகவும் சிரமம். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்