திருச்செந்தூர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5½ பவுன் நகை திருட்டு திருவிழா கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர் கைவரிசை

திருச்செந்தூர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5½ பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2019-01-24 21:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே கல்லாமொழி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அருள்வேல் (வயது 42). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஸ்ரீமதி (39). இவர் கடந்த 21-ந்தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் கோவிலுக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் திருச்செந்தூரில் இருந்து, அரசு டவுன் பஸ்சில் தங்களது ஊருக்கு புறப்பட்டனர். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

வேறு வழியின்றி அருள்வேல் குடும்பத்தினர் கூட்டநெரிசலில் சிக்கியவாறு பஸ்சில் ஏறி பயணித்தனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஸ்ரீமதி கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். கல்லாமொழியில் பஸ்சில் இருந்து கீழே இறங்கிய ஸ்ரீமதி, தனது தங்க சங்கிலி திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்