தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,905 பேர் கைது
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1905 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் கணிசமானோர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், பள்ளிகள் வெறிச்சோன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 3–வது நாளாக தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுருளிநாதன், ரத்தினம், கவுரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் சேகர், பாஸ்கரன், நெடுஞ்செழியன், பழனியம்மாள், காமராஜ், மாதேஸ்வரன், கேசவன், கவிதா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 3500 பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், பகுதிநேர நூலகர்கள், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்யும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு சாலையின் இருபுறங்களிலும் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினார்கள். சாலை மறியல் காரணமாக தர்மபுரி–சேலம் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் என மொத்தம் 1,905 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களில் ஏற்றப்பட்டு தர்மபுரியில் உள்ள திருமண மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.