பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-23 23:34 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் பாலக்கரையில் ஜனநாயக விவசாயிகள் சங்கம் மற்றும் வயலூர் கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் ராமர், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்க தலைவர் வக்கீல் தனவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை யாற்றினார்கள். வடகிழக்கு பருவமழை குறைந்துவிட்டதால் 2018-19-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் நகரத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வயலூர் ஏரியை என்.எல்.சி. நிதியில் ஆழப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும், விருத்தாசலம்-கடலூர் ரெயில் பாதையில் மூடப்பட்ட வயலூர் கேட்டினை பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று சப்-கலெக்டர் பிரசாந்தை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்