மதுரை உள்பட 4 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று மதுரை உள்பட 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பும், திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலுக்கு முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள் அதனை மீறி மறியல் செய்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 800 பெண்கள் உள்பட 1,333 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மேலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு அனைவரும் மதுரை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 284 பெண்கள் உள்பட 434 பேர் மேலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டதாரிகள் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 275 பெண்கள் உள்பட 462 பேரை உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலத்தில் தேவர் சிலை முன்பு விருதுநகர் ரோட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் செய்த 240 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக நேற்று 2-வது நாளாக பல இடங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டது.