திருப்பூர் மாவட்டத்தில் 9 இடங்களில் சாலைமறியல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3,629 பேர் கைது
திருப்பூர் மாவட்டத்தில் 9 இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3,629 பேரை போலீசார் கைது செய்தனர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 2-வது நாளாக அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. 1-4-2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
2-வது நாளாக நேற்று ஜாக்டோ-ஜியோ சார்பில் வட்ட அளவில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு வட்டம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை மறியல் போராட்டம் தொடங்கியது. போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சரவணன் தலைமை தாங்கினார். ராஜேஷ்(தமிழக ஆசிரியர் கூட்டணி), காளஸ்வரி(தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), மரியபிரகாஷ்(தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கரன், கனகராஜா, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாக்கியம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
பின்னர் பல்லடம் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த திருப்பூர் தெற்கு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 67 ஆண்கள் உள்பட 371 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல் ஜாக்டோ- ஜியோ திருப்பூர் வடக்கு வட்டம் சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி செல்வக்குமார் தலைமை தாங்கினார். ஜோசப் (தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), அரசு ஊழியர் சங்க நிர்வாகி அம்மாசை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி சுந்தரமூர்த்தி கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருப்பூர் வடக்கு போலீசார் உடனடியாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினார்கள். இதில் 250 பெண்கள் உள்பட 325 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 95 பெண்கள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 933 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரம் என 9 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 3 ஆயிரத்து 629 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்று திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 40 சதவீதம் பேரும், ஆசிரியர்கள் 69 சதவீதம் பேரும் பணிக்கு செல்லவில்லை. இதனால் அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது. அதுபோல் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறும்போது “ நாளை (இன்று) மேற்கண்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்” என்றனர்.