பதவி உயர்வு வழங்கக்கோரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஊர்வலம்

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நேற்று சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

Update: 2019-01-23 22:45 GMT
புதுச்சேரி,

விடுபட்ட அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், காலியாக உள்ள 100-க்கும் மேற்பட்ட பொறியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் அவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதனால் அவர்களின் போராட்டம் தொடர்கிறது.

சட்டசபை நோக்கி ஊர்வலம்

இந்தநிலையில் நேற்று காலையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு பொறியாளர்கள் கூடினார்கள். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு சங்க தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஆம்பூர் சாலை அருகே சென்றது. அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அதைத்தொடர்ந்து அங்கேயே கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் எழில்வண்ணன், நிர்வாகிகள் சிவச்சந்திரன், பெத்ரோகுமார், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்