மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 3 ஆயிரத்து 340 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-23 22:45 GMT
திண்டுக்கல்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் 21 மாத சம்பள நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 190 பேர் பணியாற்றி வருகின்றனர்.

நேற்றைய தினம் 6 ஆயிரத்து 178 ஆசிரியர்கள் மற்றும் 3 ஆயிரத்து 450 அரசு ஊழியர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 628 பேர் வேலைக்கு வரவில்லை. இதில் அரசு ஊழியர்களை விட ஆசிரியர்களே அதிக அளவில் நேற்றும் பணிக்கு வரவில்லை.

இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்களில் 3 ஆயிரத்து 896 பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. சில பள்ளிகளில் நுழைவுவாயில் பகுதியில் 2 நாட்கள் விடுமுறை என எழுதப்பட்டு இருந்தது. இதனால் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அதேபோல் ஒருசில உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் காலையில் திறந்து இருந்த பல பள்ளிகளில் மதியம் சத்துணவு வழங்கிய பின்னர், மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் புத்தகப் பையுடன் வீட்டுக்கு திரும்பி சென்றனர். இதன்மூலம் மாவட்டம் முழுவதும் நேற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படவில்லை.

இதற்கிடையே திண்டுக்கல் தாலுகாவில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் அங்கிருந்து பஸ்நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி சென்றனர். இறுதியில் பஸ்நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சாலையில் அமர்ந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் வேறுவழியில் திருப்பி விடப்பட்டன. மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உள்பட மொத்தம் 816 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நால்ரோடு பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்தர் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆல்பிரட் டென்னிஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 387 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர் ஆத்துமேட்டில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற 665 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வேடசந்தூர் தாலுகாவில் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஆகிய ஒன்றியங்களில் 348 பள்ளிகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நால்ரோடு பகுதிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக வந்தனர். அதையடுத்து அங்கு சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 240 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானல் நகர் மூஞ்சிக்கல் பஸ்நிலையம் அருகே சாலை மறியல் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 76 பெண்கள் உள்பட 132 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பழனி தாலுகா அலுவலகம் அருகே பழனி-தாராபுரம் சாலையில் நடந்த மறியலில் அரசு ஊழியர் சங்க நிர்வாகி வேலுச்சாமி உள்பட 548 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற மறியலில் 306 பேரும், நத்தம் ஒன்றிய அலுவலகம் அருகே நடந்த மறியலில் 246 பேரும் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 8 இடங்களில் நடந்த மறியலில் 3 ஆயிரத்து 340 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்