பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு: பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை

பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2019-01-23 22:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட மலங்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி செல்வி(வயது 40). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் விவசாய கூலித்தொழிலாளியான கலியபெருமாள் மனைவிக்கும் தெருவில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந்தேதி அன்று ஏற்பட்ட தகராறில் கலியபெருமாள், செல்வியை தகாத வார்த்தையால் திட்டி கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த செல்வி, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கலியபெருமாளை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. செல்வியை தரக்குறைவாக திட்டியதற்காக கலியபெருமாளுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், அரிவாளால் வெட்டியதற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

ரூ.5 ஆயிரம் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.500-ஐ கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து கலியபெருமாளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்