காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சாலை மறியல்
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேனியில் சாலை மறியல் செய்தனர். 1,817 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி,
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியா) சார்பில், நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வேலைவாய்ப்பை குறைக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் நாளில் வேலைநிறுத்தம் செய்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் செய்தனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேனி நேரு சிலை அருகில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதற்காக பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையோரம் உள்ள தியேட்டர் அருகில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். அங்கு இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி நேரு சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
இதற்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார். இதில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமதுஅலி ஜின்னா, நிதிகாப்பாளர் அன்பழகன், செய்தி தொடர்பாளர் ராஜவேல் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் மற்றும் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மறியலில் ஈடுபட்ட 1,312 பெண்கள் உள்பட 1,817 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் உள்ள 6 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.