ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம் சாலை மறியலில் ஈடுபட்ட 884 பேர்கைது

நீலகிரியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட 884 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-23 23:00 GMT
ஊட்டி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை தொடங்கி, அதில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கக்கூடாது என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இதில் வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு பணிக்கு செல்லவில்லை. இதனால் பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்ததை காண முடிந்தது. அதன் காரணமாக அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அரசு ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 3 ஆயிரத்து 7 ஆசிரியர்களில், 50 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.

அதன் காரணமாக பல பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை குறைந்து காணப்பட்டது. ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தனர். பிளஸ்-1 வகுப்பில் ஆசிரியர் வராததால், பள்ளி மாணவ-மாணவிகள் தாங்களாகவே பாடங்களை படித்து கொண்டு இருந்தனர். மேலும் பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி தலையாட்டுமந்து பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நேற்று மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. இதனால் வகுப்பறைகள் பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தன. அங்கு பணிக்கு வந்த 2 பகுதி நேர ஆசிரியர்கள், மாணவர்கள் வராததை அடுத்து காத்திருந்து விட்டு திரும்பி சென்றனர். இதனால் அந்த பள்ளியின் நுழைவுவாயில் மூடப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் விளக்கி பேசினர். பின்னர் அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலுக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார் மறியலை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மறியல் செய்த 144 பெண்கள் உள்பட 276 பேரை கைது செய்தனர்.

கோத்தகிரி மார்க்கெட் திடலில் உள்ள சாலையில் ஜாக்டோ- ஜியோ கூட்டுக்குழு நிர்வாகிகள் சரவணக்குமார், வேல்முருகன், அய்யனார் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலை மறியல் செய்த பெண்கள் உள்பட 160 பேரை கைது செய்தனர்.

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ சங்கத்தை சேர்ந்த ரமேஷ், கருணாநிதி, சேகர், ராஜகோபால், நாகநாதன், சலீம், பரமேஷ்வரி, முருகேசன் உள்பட 448 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்